காசிக்கு செல்லவேண்டும் என்ற ஆசையே என் மனதில் எழுந்ததில்லை. யார் அழைத்துப்போவார்கள்?நிறைவேற முடியாத விஷயங்களில் ஆசை வைப்பது முட்டாள்தனம்.
எங்களின் குடும்ப நண்பரான டாக்டர் மகாதேவன் தான்
சில நண்பர்களுடன் காசி மற்றும் அலஹாபாத் மூன்று நாட்கள் பயணமாக விமானம் மூலம் செல்வதாகவும் எங்களை உடன் அழைத்துப்போவதாக சொன்னார்.
முதலில் என்னவர் அதெல்லாம் உடல்நிலை சரியில்லாதவள் எங்கே போவது என்று மறுத்துவிட்டார். ஆனால் என் பெரிய பெண் இதைவிட்டால் உங்களுக்கு நல்ல துணை கிடைக்காது.அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினாள்.
செப்டம்பர் இரண்டாம் நாள் புறப்பட்டு சென்று ஐந்தாம் நாள் திரும்புவதாக திட்டம். சென்னையில் உள்ள தீபா டிரவேல்ஸ் மூலம் ஏற்பாடுகள் செய்தார். ஒரு நபருக்கு இருபதாயிரம் செலவாகும், தங்குமிடம் ஐந்து நட்சத்திர ஹோட்டல் விமானநிலையத்தில் இருந்து எங்கு செல்வதானாலும் இன்னோவா குளிரூட்டப்பட்ட கார் மற்றும் படகு பயணம் எல்லாம் அதிலேயே அடங்கும் என்றார்.
பதினோரு பேர் கொண்ட குழு சென்னையில் சந்தித்து ஒன்றாக கிளம்ப திட்டம். நான்கு மாற்று ஆடைகள் மருந்துகள் அவசர தேவைக்கான மருந்துகள் வழக்கமாக கொண்டு செல்லும் இதர பயண பொருட்கள் எடுத்துக்கொண்டோம். காசியில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது கடமை. அப்போது உடுத்தும் ஆடைகளை அங்கேயே போட்டுவிடவேண்டும் என்று ஒரு சாரரும், வேண்டாம் திரும்ப ஈர ஆடைகளை சுமந்து வந்து உலர்த்த இடமில்லாமல் சிரமப்படணும் அதோடு கண்டவரும் குளித்த இடத்தில குளித்த ஆடைகளை சுமந்து வருவது வியாதிகளை சுமந்து வருவதுபோல் ஆகும் என்றேன். அந்த நாட்களிலும் இதை மனதில் கொண்டுதான் இதைப்போன்ற இடங்களில் ஸ்நானம் செய்தால் துணிகளை அங்கேயே போட்டுவிட வேண்டும் என்று சொன்னார்கள். சாதாரணமாக சொன்னால் மனிதன் ஏற்றுக்கொள்ளமாட்டான் அதனால் சாஸ்திரம் என்று சொல்லி ஏற்கவைத்தார்கள்
காலை ஆறேமுக்கால் மணிக்கு மீனம்பாக்கம் விமானநிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் Jet Airways விமானத்தில் பயணப்பட்டோம். வழியில் தண்ணீர் தவிர எது வாங்கினாலும் பணம் கொடுக்க வேண்டும், அதுவும் சாண்ட்விட்ச் சமோசா போன்ற வயதானவர்கள் சாப்பிட முடியாத உணவு வகைகள்.
முன் யோசனையாக அவரவரும் எதாகிலும் சாப்பிட கொண்டு போயிருக்கலாம். ஒன்பதே முக்காலுக்கு டெல்லி சென்றோம். அடுத்த நாற்பதாவது நிமிடத்தில் வாரணாசி செல்லும் விமானம் ஆகையால் காபி குடித்ததே போதும் என்று கழிப்பறைக்கு சென்று விட்டு விமானத்தில் ஏறிக்கொண்டோம்.
10:50 க்கு புறப்பட்டு 11:50 க்கு காசி சென்றோம் வழியில் விமானத்தில் பாவ்பாஜி கேக் மற்றும் ஜூஸ் கொடுத்தார்கள். விமானநிலைய வாசலுக்கே கார் வந்து ஹோட்டலுக்கு அழைத்து சென்றது. சீக்கிரமே பக்கத்திலே உள்ள தமிழ்நாடு ஹோட்டல் பொய் மதிய உணவை முடித்து கொண்டு வெளியே செல்ல கிளம்பி விட்டோம். நாங்கள் தங்கிய மேரதன் ஹோட்டல் காலை சிற்றுண்டி மட்டும்தான் தருவார்களாம்.
இருவத்தைந்து வயது மதிக்க தக்க கைடு வந்தார். முதலில் தச அஷ்வேமேத காட் என்னும் இடத்திற்கு சென்றோம்.
அரை கிலோமீட்டர் தொலைவிலேயே எல்லா வாகனங்களும் நின்றுவிட வேண்டும். நடந்து சென்றால் படிக்கட்டுகள் வழியாக கங்கை நீரில் பரவசத்துடன் இறங்கி தலையில் தெளித்துகொண்டோம். அகல் விளக்குகள் தொன்னையில் பூக்களின் இடையில் வைத்து விற்கிறார்கள். அதை வாங்கி கங்கா நதிக்கு பூஜை செய்தோம். அங்கிருந்து மறுபடி காரில் காசி பிரதான வீதிக்கு வந்து காரை நிறுத்திவிட்டு நடைபயணமாக சந்து பொந்துகளில் நுழைந்து புறப்பட்டு ஒருவழியா காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தோம்.
விசாலமான மதில்சுற்று உள்சுற்று வானளாவிய கோபுரங்கள் என்று பார்த்து பழகிய நமக்கு பெரிய ஏமாற்றமே.ஒரு சின்ன கூடம் அளவுக்கு இருக்கும் இடத்தில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் லிங்கம் உள்ளது. அதுவும் கொஞ்சம் உயரமானவர்கள் பக்கத்தில் உள்ள கைபிடியில் சாய்ந்து எட்டி தொட்டு வணங்கலாம். உயரம் குறைந்தவர்கள் கையில் கொண்டுபோகும் பூக்களை அர்சிப்பதோடு திருப்தி
அடையலாம்.
அடுத்து மறுபடி சில சந்துகள் தாண்டி அன்னபூரணி சன்னதி. குறுக்கே எதிர் வரும் பசுக்கள் இருசக்கர வாகனங்கள் எல்லாவற்றையும் சமாளித்து எங்களை ஒரு சர்கஸ் ரிங் மாஸ்டர் போல கூட்டிச்சென்ற கைடின் திறமையை மெச்ச வேண்டும். நாம் பாத்தி தொட்டு கும்பிடவேண்டும். பூக்கள் வாங்கி சமர்பிக்கலாம். வட நாட்டு கொவில்களில் அது ஒரு சந்தோசம்.
அடுத்து காசி விசாலாக்ஷி கோவில். எல்லாமே நடை பயணம்தான். விசாலாக்ஷி நம்மூர் அம்மன் போன்று கருங்கல் சிலை அழகிய உருவம்.
அங்கிருந்து காரில் விந்த்யச்சல் என்ற இடத்துக்கு சென்றோம் 108 சக்தி பீடங்களில் ஒன்றாம். அங்கும் கூட்டம் அதிகம். அதோடு ஹோட்டல் திரும்பி விட்டோம்.
சென்னையில் கொஞ்சதூரம் நடப்பதற்கே கெஞ்சுபவர்கள் ஆர்வக்கோளாறினால் 5 கிலோமீட்டர் அளவுக்கு நடந்தோம்.